குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, 5
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

பாடல் பின்னணிதலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது

பொருளுரை:  வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை  குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான்.  ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம். தம் இல் (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் இல் என்பதில் ‘தம்’ சாரியை, உ. வே. சாமிநாதையர் உரை – தம்முடைய வீட்டில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முடைய வீட்டில்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க.  கதூஉம் – இன்னிசை அளபெடை, மாஅத்து – அத்து சாரியை, தாய்க்கே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கழனி – வயல், மாஅத்து – மாமரத்தினது (அத்து சாரியை), விளைந்து உகு – பழுத்து விழும், தீம்பழம் – இனிய பழம், பழன – குளம், வாளை – வாளை மீன், கதூஉம் – கவ்வி உண்ணும், ஊரன் – ஊரைச் சார்ந்தவன், எம் இல் – என்னுடைய இல்லத்தில், பெருமொழி கூறி – பெரிய சொற்களைக் கூறி, தம் இல் – தன்னுடைய இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் – பிறர் தூங்கும்பொழுது தானும் கையையும் காலையும்  தூக்கும், ஆடிப் பாவை போல – கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் உருவத்தைப் போல, கண்ணாடியில் தோன்றுகின்ற பொம்மையைப்போல், மேவன செய்யும் – விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கு – தன்னுடைய மனைவிக்கு

Kurunthokai 8, Ālankudi Vankanār, Marutham Thinai – What the concubine said, as the heroine’s friends listened nearby
The man from the town,
where pond vālai fish seize
sweet fruit that ripen and
drop from a mango tree
from the nearby field, talks big
at my place.

But when he’s at his home, he’s
like the mirror image of a puppet
that lifts its hands and legs when
a puppeteer lifts them, reflecting
the wishes of his son’s mother.  

Notes:  தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத்தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது.  குறுந்தொகை 164 – கணைக் கோட்டு வாளை கமஞ்சூல் மட நாகு துணர்த் தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்.  இரா. இராகவையங்கார் உரை – விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம்.  தம் இல் (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் இல் என்பதில் ‘தம்’ சாரியை, உ. வே. சாமிநாதையர் உரை – தம்முடைய வீட்டில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முடைய வீட்டில்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க.

Meanings:   கழனி – field, மாஅத்து – of a mango tree (அத்து சாரியை), விளைந்து உகு – ripen and drop, தீம் பழம் – sweet fruits, பழன – pond, field, வாளை – valāi fish, scabbard fish, Trichiurus haumela, கதூஉம் – catches and bites, grabs and bites (இன்னிசை அளபெடை), ஊரன் – the man from such town, எம் இல் பெருமொழி கூறி – talking great words at our place, தம் இல் – in his house, கையும் காலும் தூக்கத் தூக்கும் – lifts the hands and legs, ஆடிப் பாவை போல – like a mirror reflection puppet, மேவன செய்யும் – he honors her wishes, he is obedient to her, தன் புதல்வன் தாய்க்கு – to his son’s mother, ஏ – அசை நிலை, an expletive

[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container]

2. குறுந்தொகை பாடல் 25