குறுந்தொகை 130, வெள்ளிவீதியார் 

நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  5

 

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  தோழி தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியதுமாம்.

 

பொருளுரை:   நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரிய கடல் உள்ளும் நடந்து செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள்தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா?

 

குறிப்பு:  காதலோரே – ஏகாரம் அசை நிலை.  அகநானூறு 147 – நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே.   அகநானூறு 236 – ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி.  குடி முறை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குடிகள்தோறும், நாடு, ஊர், குடி ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின் அம்முறைப்படி கூறினான்.  குடியென்றது குடும்பத்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிகள்தோறும்,  தமிழண்ணல் உரை – தனித்தனி குலம்.  இது சாதி வழிப் பிரிவன்று.  பின்னர் புகுந்த சாதி குலங்களையும் வேற்றுமை பாராட்ட வைத்தது.

 

சொற்பொருள்:   நிலந்தொட்டுப் புகார் – நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானம் ஏறார் – வானத்திற்குள் ஏறவில்லை, விலங்கு இரு முந்நீர் – விலக்கும் பெரிய கடலில்,  காலில் செல்லார் – காலினால் நடந்து செல்லவில்லை அவர்,  நாட்டின் நாட்டின் – நாடுகள் தோறும்,  ஊரின் ஊரின் – ஊர்கள் தோறும், குடிமுறை குடிமுறை –  முறையாகக் குடிகள்தோறும், தேரின் – தேடினால், கெடுநரும் உளரோ – அகப்படாமல் போய் விடுவாரா, நம் காதலோரே – நம் தலைவர்

 

Kurunthokai 130, Velliveethiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her or what the heroine said to her friend
Your lover did not dig into
earth and enter it, or climb
up the sky, or walk into the vast,
blocking ocean.

If we search every country,
every town, and every community,
can he escape us?

 

Notes:  தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  தோழி தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியதுமாம்.  அகநானூறு 147 – நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே.   அகநானூறு 236 – ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி.  குடி முறை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குடிகள்தோறும், நாடு, ஊர், குடி ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின் அம்முறைப்படி கூறினான். குடியென்றது குடும்பத்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிகள்தோறும்,  தமிழண்ணல் உரை – தனித்தனி குலம்.  இது சாதி வழிப் பிரிவன்று. பின்னர் புகுந்த சாதி குலங்களையும் வேற்றுமை பாராட்ட வைத்தது.

 

Meanings:  நிலம் தொட்டுப் புகாஅர் – he did not dig and enter the earth (புகாஅர் – இசை நிறை அளபெடை), வானம் ஏறார் – he did not climb up the sky, விலங்கு – blocking, இரு முந்நீர் – vast ocean, காலில் செல்லார் – he did not walk, நாட்டின் நாட்டின் – in every country, ஊரின் ஊரின் – in every town, குடி முறை குடி முறை – in every community, in every settlement, in every clan, தேரின் – if searched, கெடுநரும் உளரோ – can he escape us, நம் காதலோர் – our beloved man, your lover, ஏ – அசை நிலை, an expletive

9. குறுந்தொகை பாடல் - 87
11. குறுந்தொகை பாடல் - 136