குறுந்தொகை 136, மிளைப் பெருங்கந்தனார் 

“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.  5

 

பாடல் பின்னணி:  ‘காம நோயால் கலங்குவது நின் பெருமைக்குத் தகவன்று’ என்று இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது. 

 

பொருளுரை:   “காமம் காமம்” என என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள்.  காமம் வருத்தமும் நோயும் இல்லை.  நுண்மையாகி மிகுதலும் குறைதலும் இல்லை.  அதைக் கண்டு மகிழ்பவர்களைப் பெற்றால், காமமானது, யானை தழையை உண்டு அதனால் கொண்ட மதத்தைப் போல வெளிப்படும் தன்மையை உடையது.

 

குறிப்பு:  மிளைப்பெருங்கந்தனார் – குறுந்தொகை 204, தோழன் தலைவனிடம் சொன்னது – காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல் மூது ஆ தைவந்தாங்கு விருந்தே காமம் பெருந்தோளோயே.  அன்றே – ஏகாரம் அசை நிலை, இன்றே – ஏகாரம் அசை நிலை, பெறினே – ஏகாரம் அசை நிலை.  காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று உலகினர் அதைக் குறை கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை – காமம் காமம் என்று ஏதோ இழிவுடையது போல் பேசுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உலகில் உள்ளோர் காமம் காமம் என்று தீயது ஒன்றிற்கு அஞ்சிக் கூறுவார் போலக் கூறுவர், இரா. இராகவையங்கார் உரை – காமம் காமம் என இழித்துக் கூறுவர்.

 

சொற்பொருள்:  “காமம் காமம்” என்ப – காமம் காமம் என என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள், காமம் அணங்கும் பிணியும் அன்றே – காமம் வருத்தமும் நோயும் இல்லை, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே – நுண்மையாகி மிகுதலும் குறைதலும் இல்லை, யானை – யானை, குளகு மென்று ஆள் மதம் போல – தழையை உண்டு அதனால் கொண்ட மதத்தைப் போல, பாணியும் உடைத்து – வெளிப்படும் தன்மையும் உடையது, அது காணுநர்ப் பெறினே – அதைக் கண்டு மகிழ்பவர்களைப் பெற்றால்

 

Kurunthokai 136, Milai Perunkanthanār, Kurinji Thinai – What the hero said to his friend
“Love, love”, they talk about it!
Love is not a terror or a disease.
It does not become tiny nor
increase or decrease.

When it sees the right person,
it will come out,
like madness in an elephant
that has eaten herbal leaves.

 

Notes:  ‘காம நோயால் கலங்குவது நின் பெருமைக்குத் தகவன்று’ என்று இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.  மிளைப்பெருங்கந்தனார் – குறுந்தொகை 204, தோழன் தலைவனிடம் சொன்னது – காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல் மூது ஆ தைவந்தாங்கு விருந்தே காமம் பெருந்தோளோயே.  காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று உலகினர் அதைக் குறை கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் – காமம் காமம் என்று ஏதோ இழிவுடையது போல் பேசுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உலகில் உள்ளோர் காமம் காமம் என்று தீயது ஒன்றிற்கு அஞ்சிக் கூறுவார் போலக் கூறுவர், இரா. இராகவையங்கார் உரை – காமம் காமம் என இழித்துக் கூறுவர்.

 

Meanings:  “காமம் காமம்” என்ப – they say “love love” in a disrespectful manner, they say ”love love” praising it, காமம் அணங்கும் பிணியும் அன்று – love is not a terror or a disease, ஏ – அசை நிலை, an expletive, நுணங்கி – becoming tiny, கடுத்தலும் தணிதலும் – increasing and reducing, இன்று – it does not, ஏ – அசை நிலை, an expletive, யானை குளகு மென்று ஆள் மதம் போல – like an elephant in rut after it chewed leaves, பாணியும் உடைத்து – it has that tendency, அது காணுநர்ப் பெறின் – when it sees the right person, ஏ – அசை நிலை, an expletive

10. குறுந்தொகை பாடல் - 130
12. குறுந்தொகை பாடல் - 167