குறுந்தொகை 167, கூடலூர் கிழார் 

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின்,  
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.

 

பாடல் பின்னணிதலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.

 

பொருளுரை:  முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை இனிதெனத் தன் தலைவன் உண்பதால், நுண்ணிதாக மலர்ந்தது தலைவியின் முகம்.

 

குறிப்பு:  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.  கழாஅது – இசை நிறை அளபெடை, உடீஇ – சொல்லிசை அளபெடை, ஒண்ணுதல் – அன்மொழித்தொகை, முகன் – முகம் என்பதன் போலி, முகனே – ஏகாரம் அசை நிலை.

 

சொற்பொருள்:  முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலை, கழுவுறு கலிங்கம் கழாஅது – துடைத்துக் கொண்ட ஆடையை, உடீஇ – துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை உண்கண் குய் புகை கழும – குவளை மலரைப் போன்ற மையிட்டு கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் – தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென உண்பதால், நுண்ணிதின் மகிழ்ந்தன்று – நுண்ணிதாக மலர்ந்தது, ஒண்ணுதல் முகனே – தலைவியின் முகம்

 

Kurunthokai 167, Koodalūr Kilār, Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother
Wearing a garment that was not
washed after she mashed mature
curds and wiped on it with her
delicate fingers that resemble glory
lily petals, she cooked.

Smoke from her cooking spread
around and touched her kohl-lined
eyes that are like blue waterlilies.

She made sweet tamarind curry that
he enjoyed and ate. 
Her face revealed her happiness in 
a delicate manner, the young woman
with a bright forehead.

 

Notes:  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின். 

 

Meanings:  முளி தயிர் – well set curds, thick curds (முதிர்ந்த தயிர்), பிசைந்த காந்தள் மெல்விரல் – kneaded with her kāntal-like delicate fingers, malabar glory lily, Gloriosa superba, கழுவுறு கலிங்கம் – clothing on which the fingers were wiped, கழாஅது உடீஇ – she wore without washing (கழாஅது – இசை நிறை அளபெடை, உடீஇ – சொல்லிசை அளபெடை), குவளை உண்கண் – kuvalai-flower-like eyes with kohl, blue waterlily, Blue nelumbo, Nymphaea odorata, குய் புகை கழும – frying smoke fragrance spread, தான் துழந்து அட்ட – mixed and cooked by herself, தீம் புளிப் பாகர் – sweet tamarind curry (sauce), இனிதெனக் கணவன் உண்டலின் – since her husband ate it considering it tasty, நுண்ணிதின் – in a delicate manner, மகிழ்ந்தன்று – it was happy (her face), ஒள் நுதல் – the woman with a bright forehead (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை), முகன் – the face (முகன் – முகம் என்பதன் போலி), ஏ – அசை நிலை, an expletive

11. குறுந்தொகை பாடல் - 136
13. குறுந்தொகை பாடல் - 184