குறுந்தொகை 196, மிளைக்கந்தனார்

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர்!  இனியே,
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர், 5
ஐய! அற்றால் அன்பின் பாலே!

 

பாடல் பின்னணி:  வாயில் (இல்லத்தில் புகுதல்) வேண்டிப் புக்க தலைவனுக்குத் தோழி கூறியது.  தனது பரத்தமையாலே ஊடியிருந்த தலைவியின் ஊடல் தீர்த்து உடம்படச் செய்யும்படித் தோழியை வேண்டிய தலைவனுக்கு அவள் கூறியது.

 

பொருளுரை:   ஐயா! முன்பு என் தோழி உங்களிடம் பச்சை வேப்பங்காயைக் கொடுத்தால், அதை இனிய வெல்லக்கட்டி என்று கூறுவீர்கள்.  இப்பொழுது அவள் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச்சியான சுனையின் தெளிந்த தை மாதத்து நீரைத் தந்தால் கூட,  “அது சூடாக உள்ளது, உவர்ப்பாக உள்ளது” என்று கூறுகின்றீர்கள். உங்கள் அன்பு இவ்வாறு உள்ளது.

 

குறிப்பு:  தரினே – ஏகாரம் அசை நிலை, இனியே: ஏகாரம் அசை நிலை, அற்றால்: ஆல் அசை நிலை, பாலே: ஏகாரம் அசை நிலை.  பறம்பு மலையின் சுனை:  அகநானூறு 78 –  கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 – வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 – தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 – பாரி பறம்பின் பனிச் சுனை.

 

சொற்பொருள்:   வேம்பின் பைங்காய் – வேப்ப மரத்தின் பச்சைக்காய், என் தோழி தரினே – என் தோழி உன்னிடம் தந்தால், தேம்பூங்கட்டி என்றனிர் – இனிய வெல்லக்கட்டி என்று கூறினீர், இனியே – இப்பொழுது, பாரி பறம்பில் – பாரியின் பறம்பு மலையின், பனிச்சுனை – குளிர்ந்த சுனையின், தெண்ணீர் – தெளிவான நீர், தைஇத் திங்கள் தண்ணிய  – தை மாதத்திற்கு உரிய குளிர்ச்சியான, தரினும் – தந்தாலும், வெய்ய – வெட்பமாக, உவர்க்கும்  என்றனிர் – உவர்க்கும் என்று கூறுகின்றீர், ஐய – ஐயா, அற்றால் அன்பின் பாலே – இவ்வாறு உள்ளது உன்னுடைய அன்பின் தன்மை

 

Kurunthokai 196, Milai Kanthanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Before,
if my friend gave you
a bitter unripe neem fruit,
you would say that
it was a sweet sugar cube.

Now,
even if she gives you clear,
cold water from Pāri’s
Parampu Mountain springs,
chilled by Thai month’s cold,
you will say that it is warm
and brackish.

Sir, such is the nature of your love.

 

Notes:  வாயில் (இல்லத்தில் புகுதல்) வேண்டிப் புக்க தலைவனுக்குத் தோழி கூறியது.  பறம்பு மலையின் சுனை:  அகநானூறு 78 –  கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 – வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 – தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 – பாரி பறம்பின் பனிச் சுனை.

 

Meanings:  வேம்பின் பைங்காய் – bitter unripe/green fruits of neem trees, Azadirachta indica, என் தோழி தரின் – if my friend gave to you, ஏ – அசை நிலை, an expletive, தேம்பூங்கட்டி – sweet sugar cube, என்றனிர் – you said, இனி – now, ஏ – அசை நிலை, an expletive, பாரி பறம்பின் – Pari’s Parambu mountain, பனிச் சுனை – cold spring, தெண்ணீர் – clear water, தைஇ – Thai (சொல்லிசை அளபெடை), திங்கள் – month, தண்ணிய – cold, தரினும் – even if she gives, வெய்ய உவர்க்கும் – it is hot and salty, என்றனிர் – you are saying, ஐய – sir, lord, அற்று – that is how it is, ஆல் – அசை நிலை, an expletive, அன்பின் – your love, பால் – part, the nature, ஏ – அசை நிலை, an expletive

13. குறுந்தொகை பாடல் - 184
15. குறுந்தொகை பாடல் - 218