அகநானூறு 203, கபிலர் 

 

‘உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க’ என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
“இன்னள் இனையள் நின் மகள்” எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5
‘நாணுவள் இவள்’ என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய, தானே,
‘அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்’ எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்,  10
பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன்வாய்யாக,
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,  15
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

 

பொருளுரை:  கொடிய வாயினால் பேசி, பழித் தூற்றுதலை விரும்பும் புறங்கூறும் பெண்கள், தாய் மகிழ்வாள் ஆயினும், ஆத்திரம் அடைவாள் ஆயினும், தானே அவள் உணரட்டும் என்று எண்ணாது, பல நாட்களாக ‘உன் மகள் இவ்வாறு உள்ளாள்’ என்று என்னிடம் உரைத்தார்கள். நான் அந்தச் செய்தியை என் மகளிடம் கூறவில்லை. அவள் நாணம் அடைவாள் என்று மிகவும் மறைத்து விட்டேன்.  தன்னுடைய தாய், தன் களவு ஒழுக்கத்தைப் பற்றி அறிந்தால், இங்கு வாழ்வது கடினம் என்று எண்ணி, என்னைத் தனியே இந்த வெற்று மனையில் விட்டு விட்டு, வீரக் கழல்களைக் காலில் அணிந்த, ஒளியுடைய நீண்ட வேலையுடைய இளைஞனைப் பின்பற்றிப் பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்று விட்டாள் என் மகள். நான் அத்தன்மை உடையவளாக அல்லாது உண்மையாகத் தோன்றும் பொருட்டு, விலங்குகள் நடந்து உண்டாக்கிய மலை அடிவாரத்தில் உள்ள பின்னியப் பாதையில், தீங்கு உண்டாகாதவாறு அவர்களுக்கு முன்னமே சென்று சேர்ந்து, பொலிவற்ற பெரிய மலையைச் சார்ந்த தனிமையான சிறிய ஊரில், அவர்கள் இருவரையும் விருந்தினராய் ஏற்று அவர்களுக்கு உணவைக் கொடுத்துத் தங்குவதற்குத் தனியிடம் கொடுத்து, முனைகள் தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக!

 

சொற்பொருள்:  உவக்குநள் ஆயினும் – மகிழ்வாள் ஆயினும், உடலுநள் ஆயினும் – ஆத்திரம் கொள்வாள் ஆயினும், யாய் அறிந்து உணர்க என்னார் – தாய் அறிந்து உணரட்டும் என்று எண்ணாதவர்கள், தீ வாய் – தீயச் சொற்கள், அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் – பழித் தூற்றுதலையே விரும்பும் புறங் கூறும் பெண்கள், இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் – உன் மகள் இவ்வாறு உள்ளாள் என்று பல நாட்கள் என்னிடம் கூறவும், தனக்கு உரைப்பு அறியேன் – நான் அவளிடம் கூறவில்லை, நாணுவள் இவள் என – இவள் நாணம் அடைவாள் என்று, நனி கரந்து உறையும் – மிகவும் மறைந்து இருக்கும், யான் இவ் வறுமனை ஒழிய – இந்த வெற்று இல்லத்தில் நான் தனித்து இருக்க விட்டு, தானே – அவளே, அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் என – தாய் என்னுடைய களவு ஒழுக்கத்தை அறிந்தால் இங்கு வாழ்க்கை எளியதாக இருக்காது என்று, கழல் கால் – வீரக் கழல்களை அணிந்த கால்கள், மின் ஒளிர் நெடு வேல் – மின்னலைப் போன்ற ஒளியுடைய நீண்ட வேல், இளையோன் – இளைஞன், முன்னுற – முன்னே செல்ல, பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு – பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்ற அவளுக்கு, யான் அன்னேன் அன்மை – நான் அத்தன்மை உடையவளாக அல்லாது, நன் வாய்யாக – உண்மையாகத் தோன்றும் பொருட்டு, மான் – விலங்குகள், அதர் மயங்கிய – பின்னியப் பாதைகள் , மலை முதல் – மலையடி, சிறு நெறி – சிறிய பாதை, வெய்து இடையுறாஅது – துன்பம் நிகழாது, எய்தி – சேர்ந்து, முன்னர் – முன்னர், புல்லென் மா மலை – பொலிவு அற்ற பெரிய மலை, புலம்பு கொள் – தனிமை உடைய, சீறூர் – சிறிய ஊர், செல் விருந்து ஆற்றி – வருகின்ற விருந்தாக ஏற்று அவர்களுக்கு உணவுக் கொடுத்து, துச்சில் இருத்த – தனியிடத்தில் இருக்கச் செய்து, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுக – முனைகள் தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக, மன் – ஒழியிசை, ஏ – அசை நிலை

 

Akanānūru 203, Kapilar, Pālai Thinai – What the foster mother said
Without considering whether she will be happy or whether
she will suffer, and not thinking, “Let her mother know and
understand about it,” these women with evil mouths that
love to gossip, have come and told me many days, “This is
how she is, this is how your daughter is.”

Thinking that she would be embarrassed if I spoke to her
about it, I hid it out of modesty.

She thought that if I knew about it, life here would not be easy
for her, and she left this sad house, following her young man
wearing warrior anklets on his feet and carrying a bright,
tall spear, crossing many mountains and going on difficult,
wasteland paths.

I am not like that, truthfully.  May I go ahead of her and become
the woman of a house surrounded by swaying nochi trees with
sprouts with tips, in a lonely little village, and provide a feast for
them and a place to stay, walking safely without difficulty on the
small paths created by animals in the parched huge mountain!

 

Notes:  மகட்போக்கிய தாய் சொல்லியது.  மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலங்குகள் இயங்குதலால் உண்டான சிறிய வழிகள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விலங்குகள் செல்லும் பின்னிக் கிடக்கும் சிறிய நெறிகளில்.  ஒப்புமை:  அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.

 

Meanings:  உவக்குநள் ஆயினும் – even if she is happy, உடலுநள் ஆயினும் – even if she is suffering, யாய் அறிந்து உணர்க என்னார் – they won’t stay away thinking let the mother know about it herself, தீ வாய் – evil mouths, அலர் வினை மேவல் – desiring to gossip, desiring to slander, அம்பல் பெண்டிர் – women who gossip, இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் – they came many days and told me that this is how your daughter is, தனக்கு உரைப்பு அறியேன் – I had not told her about it, நாணுவள் இவள் என – since she would be embarrassed/shy, நனி கரந்து உறையும் யான் – I hid it well because of modesty, இவ் வறுமனை ஒழிய – leaving me alone in this empty house, தானே – she, ஏகாரம் அசை நிலை, an expletive, அன்னை அறியின் – if mother knows about it, இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் என – ‘life here won’t be easy for me’ she thought, கழல் கால் மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற – led by her young man with a bright tall spear and warrior anklets on his feet, பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு – to her who crossed many mountains with difficult wasteland paths, யான் அன்னேன் அன்மை – I am not like that, நன்வாய்யாக – to be truthful, மான் அதர் மயங்கிய – animal paths which are entangled, மலை முதல் சிறு நெறி – small paths on the mountain, வெய்து இடையுறாஅது – without any sorrow, எய்தி – reaching, முன்னர் – beforehand, புல்லென் மா மலை – dull huge mountain, parched huge mountain, புலம்பு கொள் சீறூர் – lonely little town, செல் – go, விருந்து ஆற்றி – providing a feast with hospitality, துச்சில் இருத்த – staying in a safe place, நுனை குழைத்து அலமரும் நொச்சி – swaying nochi trees with sprouts with tips, Vitex leucoxylon, Chaste tree, மனை கெழு பெண்டு யான் ஆகுக – may I become the woman of the house, மன்னே – மன் ஒழியிசை, ஏகாரம் அசை நிலை

16. குறுந்தொகை பாடல் - 229
18. கலித்தொகை பாடல் - 37