கலித்தொகை 37, கபிலர்

கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,  5
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்
சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால், ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று, வந்தானை,
“ஐய சிறிது என்னை ஊக்கி” எனக் கூறத்  15
“தையால் நன்று” என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில், வாய்யாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான், மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன், ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென  20
ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.

 

பொருளுரை:   குளத்தில் உள்ள குவளை மலர்போல் மைதீட்டிய கண்களை உடைய என் தோழியே!  நான் கூறுவதைக் கேட்பாயாக! வில்லைத் தன் கையில் ஏந்திய, மாட்சிமைப்பட்ட மலர்ச்சரத்தை அணிந்த ஒருவன், வலிமையான விலங்கின் காலடியைத் தேடுபவன் போல் வந்து, என்னை நோக்கி, அவனுடைய குறிப்பால் காட்டுவது அன்றி, என் மேல் தான் உற்ற காதல் நோயைப் பற்றிக் கூறாமல் சென்றான், பல நாட்களாக.  நான் உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்தேன்.  அவனுடன் உறவில்லாத நான் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தேன்.  என் முன்னால் வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன்.  என்னுடைய உணர்வுகளைக் கூறுவது பெண்மைத் தன்மைக்கு ஏற்றது இல்லை.  ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள் மெலிந்து நான் உற்ற வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான் செய்தேன், நறுமண நெற்றியையுடைய என் தோழியே!  கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான் ஆடிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது அங்கு வந்த அவனை நோக்கி, “ஐயா! என் ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடு” என்று நான் கூற, “பெண்ணே! நல்லது!” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக விழுந்தேன்.  அது உண்மை என்று எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.  அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன்.  நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், விரைந்து ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே!  எழுந்து செல்” என்று கூறும் பண்புடையவன் அவன்.

 

சொற்பொருள்: கய மலர் – குளத்தில் உள்ள மலர்கள், உண்கண்ணாய் – மையிட்ட கண்களை உடையாய், காணாய் – காண்பாயாக, ஒருவன் – ஒருவன், வய மான் அடித் தேர்வான் போல – வலிமையான விலங்கின் அடியைத் தேடுபவன் போல், தொடை – தொடுத்த, மாண்ட கண்ணியன் – மாட்சிமைப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்தவன், வில்லன் – வில்லைக் கையில் கொண்டவன், வரும் என்னை நோக்குபு – வந்து என்னை நோக்கி, முன்னத்தின் காட்டுதல் அல்லது – குறிப்பால் காட்டுவது அன்றி, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும் – தான் உற்ற காதல் நோயைப் பற்றி அவன் கூறாமல் செல்வான், மன் – ஓர் அசை, பல் நாளும் – பல நாட்கள், பாயல் பெறேஎன் படர் கூர்ந்து – உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்து, அவன் வயின் சேயேன் – அவனுடன் உறவில்லாத நான், மன் – ஓர் அசை, யானும் துயர் உழப்பேன் – நானும் வருத்தத்தில் ஆழ்வேன், ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் – அங்கு என் முன்னால் வந்து வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன், ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு – பெண்ணின் தன்மை இல்லை என் வருத்தத்தைக் கூற, ஆயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று – ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று, ஒரு நாள் – ஒரு நாள், என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் – என் தோளை மெலியச் செய்த துயரத்தால், துணிதந்து ஓர் நாண் இன்மை செய்தேன் – துணிவுடன் நாணம் இல்லாத செயலை நான் செய்தேன், நறு நுதால் – நறுமணமான நெற்றியையுடைய என் தோழியே, ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில், ஊசல் ஊர்ந்து ஆட – நான் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன், ஒரு ஞான்று வந்தானை – அப்பொழுது அங்கு வந்தவனை, ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூற – ஐயா!  என் ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடு என்று நான் கூற, தையால் நன்று என்று அவன் ஊக்க – பெண்ணே! நல்லது என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில் – கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன், வாய்யாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் – அது உண்மை என்று எண்ணி என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான், மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் – அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன், மன் – ஓர் அசை, ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் – நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், மற்று ஒய்யென ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் – அதன் பின் அவன் விரைவில் ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! எழுந்து செல்வாயாக’ என்று கூறும் பண்புடையவன் அவன்

 

Kalithokai 37, Kapilar, Kurinji, What the heroine said to her friend
Listen my friend with kohl-lined eyes
that look like waterlily blossoms in ponds!
A peerless man carrying a bow on his shoulder
and wearing well-made flower garlands
came pretending to track the pug marks of
wild animals. He looked at me.

His face expressed his painful love affliction
for me, but he came and left without saying
anything to me. I was unable to sleep on seeing
this suffering man with whom I did not have a
relationship, and I became deeply distressed.

He did not express his love to me, and my
feminine modesty prevented me from expressing
my feelings. Thinking that he would leave without
knowing my feelings for him, which caused my arms
to become thin, I did a shameless thing with courage.

Oh my friend with a fragrant forehead!
Near the millet field where I stood guard
driving away flocks of parrots and protecting grain,
I sat on a swing and swayed about. He came there
on that day. “Sir! Push my swing a little bit”,
I said. Alright lady. I’ll do that,” he said.
Pretending my hands slipped, I fell on his bosom.
He thought that I really slipped off the swing,
grabbed me quickly, and held me close to his chest.
I lay there pretending I was not aware of my body.

If I rose up he’d have said “Oh woman wearing shining
earrings! Please leave!” He was a refined gentleman.

 

Meanings:  கயமலர் – pond flowers, blue waterlilies, உண்கண்ணாய் – Oh one with kohl-lined eyes, காணாய் – you have not seen, you have not considered, ஒருவன் – a man, வயமான் அடித் தேர்வான் போல – like he was searching for wild animal pug marks, தொடை மாண்ட – well strung, கண்ணியன் – a man wearing a flower strand, வில்லன் – a man with a bow, வரும் – he comes, என்னை நோக்குபு – he sees me, முன்னத்தின் காட்டுதல் அல்லது – other than showing the signs, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும் – he left without telling me about the (love) disease that he is afflicted with, மன் – அசை நிலை, an expletive, பல் நாளும் – for many days, பாயல் பெறேஎன் – I could not sleep (பெறேஎன் – இன்னிசை அளபெடை), படர் கூர்ந்து – sadness grew, அவன் வயின் – toward him, சேயேன் மன் யானும் – I who did not have a relationship with him took pity (மன் – அசை நிலை, an expletive), துயர் உழப்பேன் – I became sad ஆயிடைக் கண் – from there, கூறுதல் ஆற்றான் அவன் – he would not talk , ஆயின் – but பெண் அன்று – being a woman, உரைத்தல் நமக்கு ஆயின் – since speaking my mind is not the manner for me, இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு – that he will leave without knowing my mind (இன்னதூஉம் – இன்னிசை அளபெடை), ஒரு நாள் – one day, என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் – due to the pain my arms became thin, துணிதந்து – boldly, courageously, ஓர் நாண் இன்மை செய்தேன் – I indulged in a shameless act, நறு நுதால் – Oh one with a fragrant forehead, ஏனல் – millet field, இனக்கிளி – flocks of parrots, யாம் கடிந்து ஓம்பும் – where I guarded and chased, புனத்து அயல் – near the field, ஊசல் ஊர்ந்து ஆட – swinging in the swing, ஒரு ஞான்று – one day, வந்தானை – to the man who came, ஐய சிறிது என்னை ஊக்கி – Oh sir! Raise and push my swing a little bit, ஆட்டி விடுவாயாக (ஊக்கி – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று), தையால் – Oh young woman, நன்று – good lady, என்று அவன் ஊக்க – and he pushed (ஆட்டி விட்டான்), கை நெகிழ்பு – hands slipped பொய்யாக வீழ்ந்தேன் – I acted like I fell down, அவன் மார்பில் – on his chest, வாய்யா – as truth (வாயாக, ஈறு கெட்டது), செத்து – thinking, ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் – he caught me quickly and held me (விரைவுக்குறிப்பு), மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் – I lay on him like I was not aware of my body, மன் – ஒழியிசை, ஆயிடை – there, மெய் அறிந்து – knowing the true situation, ஏற்று எழுவேன் ஆயின் – if I had risen and got up, மற்று – after that (வினைமாற்றின்கண் வந்தது), ஒய்யென – quickly (விரைவுக்குறிப்பு), ஒண் குழாய் – Oh woman of shining earrings, செல்க – please leave, எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் – he had the refinement to say so

17. அகநானூறு பாடல் - 203
19. கலித்தொகை பாடல் - 9