நற்றிணை 136, நற்றங்கொற்றனார் 

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என் ஐ வாழிய, பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய  
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந்தொடி செறீஇயோனே.

 

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தில் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவி, தன் மேனி வேறுபடுவதை உணர்ந்து, தலைவன் அவளை மணம் புரிய வேண்டும் என்று கருதினாள். அவன் அருகில் இருப்பதை அறிந்து இவ்வாறு உரைக்கின்றாள்.  தலைவன் பிரிதலால் மெலிந்த தலைவிக்கு அவளுடைய தந்தை இறுக்கமான வளையல்களைத் தந்தார்.  அது ஊராரின் அலரைத் தடுத்தது என்று தலைவி தோழியிடம் கூறியது.

 

பொருளுரை:   அழகான திரண்ட ஒளியுடைய வளையல்களை விரும்பி, அவை வேண்டும் என்று நான் அழவும், நோயுற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியது கொடுக்காமல் நல்ல மருந்தை ஆராய்ந்து கொடுத்த மருத்துவன் போல, என் தந்தை, பலராலும் புகழப்பெற்ற மலைகள் பொருந்திய நாட்டையுடைய என்னுடைய தலைவனுடன் எனக்கு ஏற்பட்ட சிறிய பிரிவு உண்மையை அறிந்தவன் போன்று, கழற்றினாலும் கழன்று நீங்காது, தன் எல்லையில் தங்கி என் தோளின் பழியை மறைக்கின்ற, எனக்கு உதவும், கலப்பு இல்லாத பொன்னாலாகிய தோள் வளையல்களைத் தந்து இறுக்கமாக இருக்குமாறு செய்தான்.  அவன் பல்லாண்டு வாழ்வானாக! 

 

குறிப்பு:  இலக்கணம்:   கொடாஅது – இசை நிறை அளபெடை, செறீஇயோனே – சொல்லிசை அளபெடை, ஏகாரம் அசைநிலை.

 

சொற்பொருள்:   திருந்து கோல் – திருத்தமான திரண்ட, அழகான திரண்ட, எல் வளை வேண்டி யான் அழவும் – ஒளியுடைய வளையல்களை விரும்பி வேண்டும் என்று நான் அழவும், அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நோயுற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியது கொடுக்காமல், மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – மருந்தை ஆராய்ந்து கொடுத்த மருத்துவன் போல, என் ஐ வாழிய – என் தந்தை பல்லாண்டு வாழ்வானாக, பலவே பன்னிய – பலராலும் புகழப்பெற்ற, மலை கெழு நாடனொடு – மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனுடன், நம்மிடைச் சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – சிறிதளவு அவன் பிரிகின்றதன் உண்மையை அறிந்தவன் போன்று, நீப்ப நீங்காது – கழற்றினாலும் கழன்று நீங்காது, வரின் வரை அமைந்து – தன் எல்லையில் தங்கி, தோள் பழி மறைக்கும் – தோளின் பழியை மறைக்கின்ற, உதவி – உதவியையுடைய, போக்கு இல் – கலப்பு இல்லாத, பொலந்தொடி செறீஇயோனே – பொன்னாலாகிய தோள் வளையல்களை தந்து செறிக்கச் செய்தான் (இறுக்கமாக இருக்குமாறு செய்தான்)

 

Natrinai 136, Natrankotranār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
I cried that I wanted beautiful,
bright, round bangles, and my
father, like a good doctor who gives
the right medicines and not what
his patients desire, gave them to me.
May he live long!  He gave me fine,
gold bangles that fit perfectly on my
arms, without slipping even when
pushed down,
as if he knew that I was separated
from the man from the country with
mountains for a little while, who has
been praised by many. 
The bangles he gave me saved me
from gossip!

 

Notes:  களவு ஒழுக்கத்தில் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவி, தன் மேனி வேறுபடுவதை உணர்ந்து, தலைவன் அவளை மணம் புரிய வேண்டும் என்று கருதினாள். அவன் அருகில் இருப்பதை அறிந்து இவ்வாறு உரைக்கின்றாள்.  தலைவன் பிரிதலால் மெலிந்த தலைவிக்கு அவளுடைய தந்தை இறுக்கமான வளையல்களைத் தந்தார்.  அது ஊராரின் அலரைத் தடுத்தது என்று தலைவி தோழியிடம் கூறியது.

 

Meanings:  திருந்து கோல் – perfect and rounded, beautiful and rounded, எல் வளை – bright bangles, வேண்டி யான் அழவும் – cried that I wanted, அரும் பிணி – incurable diseases, உறுநர்க்கு – to the afflicted ones, வேட்டது – what was desired, கொடாஅது – not giving (இசை நிறை அளபெடை), மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – like a good physician who checks and gives the right medicine, என் ஐ – my father, வாழிய – may he live long, பலவே பன்னிய – being praised by many, மலை கெழு நாடனொடு – with the man from the country with mountains, நம்மிடை – between us, சிறிய தலைப்பிரிவு உண்மை – truth about a little separation, அறிவான் போல – like he understood, நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – bangles that do not slip beyond their limit when trying to push, tight bangles, தோள் – arms, பழி மறைக்கும் – hiding blame, உதவி – helped, போக்கு இல் – faultless, perfect, பொலந்தொடி – gold bangles, செறீஇயோனே – he gave fitting ones to me (சொல்லிசை அளபெடை, ஏ – அசை நிலை, an expletive)

22. நற்றிணை - பாடல் 110
24. நற்றிணை - பாடல் 305