நற்றிணை 397, அம்மூவனார் 

தோளும் அழியும் நாளும் சென்றென,

நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்

கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து

அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே,

நோயும் பெருகும் மாலையும் வந்தன்று,  5

யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்

பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்

மறக்குவேன் கொல் என் காதலன் எனவே.

 

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை என்று வருந்திய தலைவியைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள்.  அவளிடம் தலைவி சொல்லியது.

 

பொருளுரை:  என் தோள்களும் மெலிந்து அழகு இழந்தன.  தலைவன் திரும்பி வருவேன் எனக் குறித்த பருவமும் சென்று விட்டது.  நீண்ட சுரத்து வழியைப் பார்த்து, ஒளி இல்லாது என் கண்கள் தங்கள் பொலிவை இழந்தன.  என்னுடைய அறிவும் என்னைவிட்டு நீங்கி மயங்கி (குழப்பம் அடைந்து) வேறு ஆகின்று.  என்னுடைய காதல் நோய் பெருகியது.  என்னைத் துன்புறுத்தும் மாலை நேரமும் வந்தது.  என்ன ஆவேன் நான்? இங்கு நான் சாவிற்கு அஞ்சவில்லை, நான் அஞ்சுவது யாது எனின், சாவிற்குப் பின் என்னுடைய மறுபிறப்பு வேறாகும்பொழுது என் தலைவனை நான் மறந்து விடுவேனோ என்பது தான்.

 

குறிப்பு:  அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று, ஈங்கோ – ஓகாரம் அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை – ‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை 49) இவ்வாசிரியரே கூறுதல் காண்க.  ஆதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன்.  நீ கவலற்க என்பது குறிப்பெச்சம்.  தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க.  செத்தால் எய்தக் கடவ பிறப்புத் தலைமகற்கும் எனக்கும் உள்ள இத்தொடர்பே நிலைபெற அமையாது வேறுபடுமாயின், என் காதலனை மறத்தல் கூடுமென அஞ்சுகின்றேன் என்பாள் ‘ அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’ என்றும் கூறினாள்.

 

சொற்பொருள்:   தோளும் அழியும் – என் தோள்களும் மெலிந்து அழகு இழந்தன, நாளும் சென்றென – தலைவன் திரும்பி வருவேன் எனக் குறித்த பருவமும் சென்றது, நீள் இடை அத்தம் நோக்கி – நீண்ட சுரத்து வழியைப் பார்த்து, வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின – ஒளி இல்லாது என் கண்கள் பொலிவு இழந்தன, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – என்னுடைய அறிவும் என்னைவிட்டு நீங்கி மயங்கி (குழப்பம் அடைந்து) வேறு ஆகின்று, நோயும் பெருகும் – என்னுடைய காதல் நோய் பெருகியது, மாலையும் வந்தன்று – மாலை நேரமும் வந்தது, யாங்கு ஆகுவென் கொல் யானே – என்ன ஆவேன் நான், ஈங்கோ சாதல் அஞ்சேன் – இங்கு நான் சாவிற்கு அஞ்சவில்லை, அஞ்சுவல் – நான் அஞ்சுவது யாதெனின், சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே – சாவிற்குப் பின் என்னுடைய மறுபிறப்பு வேறாகும்பொழுது என் தலைவனை நான் மறந்து விடுவேனோ என்று (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல்)

 

Natrinai 397, Ammoovanār, Pālai Thinai – What the heroine said to her friend
My arms are ruined; promised days
have gone by; my eyes have lost their
luster and ability to see, looking at the
long wasteland path, and confusion
reigns.  My intelligence has been lost.

My love affliction has increased.
Evening time has arrived to cause me
distress.  What will happen to me here?

I am not afraid of death.  What I fear is
if I die, will I forget my lover in my next
birth if it is different.

 

Notes:  குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை என்று வருந்திய தலைவியைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள்.  அவளிடம் தலைவி சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – ‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை 49) இவ்வாசிரியரே கூறுதல் காண்க.  ஆதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன்.  நீ கவலற்க என்பது குறிப்பெச்சம்.  தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க.  செத்தால் எய்தக் கடவ பிறப்புத் தலைமகற்கும் எனக்கும் உள்ள இத்தொடர்பே நிலைபெற அமையாது வேறுபடுமாயின், என் காதலனை மறத்தல் கூடுமென அஞ்சுகின்றேன் என்பாள் ‘ அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’ என்றும் கூறினாள்.

 

Meanings:  தோளும் அழியும் – arms are ruined, நாளும் சென்றென – since days have gone by, நீள் இடை அத்தம் நோக்கி – looking at the long wasteland path, வாள் அற்றுக் கண்ணும் – eyes that have lost luster, காட்சி – seeing, தௌவின – they are ruined, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – my intelligence has left me and is confused and different, நோயும் பெருகும் – love affliction has increased, மாலையும் வந்தன்று – the disease-increasing evening time has arrived, யாங்கு ஆகுவென் கொல் யானே – what will happen to me, ஈங்கோ – here, சாதல் அஞ்சேன் – I am not afraid of death, அஞ்சுவல் – I am afraid (தன்மையொருமை வினைமுற்று), சாவின் – if I die, பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் – if my birth is different, மறக்குவேன் கொல் என் காதலன் – will I forget my lover (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt), எனவே – thus (ஏ – அசை நிலை, an expletive)  

24. நற்றிணை - பாடல் 305