குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார் 

காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று 5
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.

 

பாடல் பின்னணிதலைவன் பிரிந்தகாலத்தில் தன்னுடைய பொலிவு இழந்த மேனியைக் கண்டு கவலையுற்ற தோழியிடம், “தலைவன் என்னுடன் இருப்பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்.  பிரிவின் பொலிவு இழந்தவள் ஆவேன்” என்று தலைவி கூறியது.

 

பொருளுரை:  என் காதலர் என்னுடன் இருந்தால் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தோழி.  அவர் என்னைப் பிரிந்த காலத்தில், பாலை நிலத்தில் பொருந்திய அழகிய சிறு ஊரில், மனிதர்கள் நீங்கிச் சென்ற, அணில்கள் முன் முற்றத்தில் விளையாடும் தனிமையான வீட்டைப் போல, பொலிவு இழந்து வருந்துவேன்.

 

குறிப்பு:  ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஞான்றே: ஏகாரம் அசை நிலை.  நற்றிணை – 153 – வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே, கலித்தொகை 23 – நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

 

சொற்பொருள்:   காதலர் – காதலர்,  உழையராக – உடன் இருந்தால், பெரிது உவந்து – மிகவும் மகிழ்ச்சி அடைந்து,  சாறு கொள் ஊரின் – விழாவுடைய ஊரைப் போன்று, புகல்வேன் – மகிழ்வேன், மன்ற – உறுதியாக, அத்த – பாலை நிலத்தின்,  நண்ணிய – பொருந்திய, அம் – அழகிய, குடிச் சீறூர் – சிறிய ஊர், மக்கள் போகிய – மக்கள் அகன்ற,   அணில் ஆடு – அணில் விளையாடும்,  முன்றில் – வீட்டு முற்றம்,  புலம்பு இல் போல – தனிமையான இல்லம் போல், புல்லென்று – பொலிவின்றி,  அலப்பென் – நான் வருந்துவேன், தோழி – தோழி,  அவர் – அவர்,  அகன்ற ஞான்றே – பிரிந்து சென்ற பொழுது

 

Kurunthokai 41, Anilādu Mundriyār, Pālai Thinai – What the heroine said to her friend, about her love
When my lover is by my side,
I’m very happy like a festive town.

When he leaves,
I grieve like a lonely, lusterless,
abandoned house in the wasteland,
where squirrels play in the front yard.

 

Notes:  தலைவன் பிரிந்தகாலத்தில் தன்னுடைய பொலிவு இழந்த மேனியைக் கண்டு கவலையுற்ற தோழியிடம், “தலைவன் என்னுடன் இருப்பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்.  பிரிவின் பொலிவு இழந்தவள் ஆவேன்” என்று தலைவி கூறியது.  நற்றிணை – 153 – வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே, கலித்தொகை 23 – நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

 

Meanings:  காதலர் – lover, உழையராக – by my side, பெரிது உவந்து – I become very happy, சாறு கொள் ஊரின் – like a town with festivities (இன் உருபு ஒப்புப் பொருளது), புகல்வேன் – I will be very happy, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, அத்த நண்ணிய –  near the wasteland, in the wasteland, அம் – beautiful, குடிச் சீறூர் – small town with people, மக்கள் போகிய – after people have abandoned, அணில் ஆடு – squirrels playing, முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), புலம்பு இல் போல – like a lonely house, புல்லென்று – without luster, அலப்பென் – I will feel sad, I will grieve, தோழி – O friend, அவர் அகன்ற ஞான்று – when he goes away, ஏ – அசை நிலை, an expletive

3. குறுந்தொகை பாடல் - 28
5. குறுந்தொகை பாடல் - 43