குறுந்தொகை 49, அம்மூவனார் 


அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. 5

 

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்தில், முன்பு இருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு கூடி மகிழ்ந்த தலைவி அவனிடம் கூறியது.

 

பொருளுரை:   அணில் பல்லைப் போன்ற முள்ளையும், பூந்தாதையும் உடைய முள் செடிகள் நிறைந்த நீலமணியின் நிறத்தை ஒத்த கடலினுடைய கரையின் தலைவனே!  இந்தப் பிறவி முடிந்து அடுத்த பிறவி ஆனாலும் நீயே எனக்குக் கணவன் ஆகுக.  நான் உன்னுடைய நெஞ்சுக்கு பொருந்துபவள் ஆகுக.

 

குறிப்பு:  நேர்பவளே: ஏகாரம் – அசை நிலை.  அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப (49) – உ. வே. சாமிநாதையர் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையையுமுடைய கடற்கரையை உடைய தலைவ, இரா. இராகவையங்கார் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய முண்டக மலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் (கறுப்பு அன்னங்கள்) மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப.

 

சொற்பொருள்:   அணில் பல் அன்ன – அணிலின் பல்லைப் போன்று,  கொங்கு முதிர் – தாது நிறைந்த, முண்டகத்து – முள் செடியின்,  மணி – நீல மணி,  கேழ் – கருமை,  அன்ன – போல்,   மாநீர் – கடல்,  சேர்ப்ப – நெய்தல் நிலத் தலைவனே,  இம்மை – இந்தப் பிறவி,  மாறி – மாறி, மறுமையாயினும் – மறு பிறவி ஆனாலும்,  நீ ஆகியர் என் கணவனை – நீயே என் கணவன் ஆகுக,  யான் ஆகியர் – நான் ஆகுக,  நின் நெஞ்சு – உன்னுடைய நெஞ்சுக்கு,  நேர்பவளே – ஒத்தவள்

 

Kurunthokai 49, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her husband
Oh lord of the shores,
where the dark ocean
is sapphire colored,
and pollen-filled
mundakam bushes
have thorns
like teeth of squirrels!

May you to be my husband
and me be your wife in our
next life, as we are in this one.

May I be the one
most agreeable to your heart.

 

Notes:  தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்தில், முன்பு இருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு கூடி மகிழ்ந்த தலைவி அவனிடம் கூறியது.  அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப (1-2) – உ. வே. சாமிநாதையர் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையையுமுடைய கடற்கரையை உடைய தலைவ, இரா. இராகவையங்கார் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய முண்டக மலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் (கறுப்பு அன்னங்கள்) மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப.

 

Meanings:  அணில் பல் அன்ன – thorns that are like the teeth of squirrels, கொங்கு முதிர் – pollen filled, honey filled, முண்டகத்து – with mundakam plants, of mundakam plants, நீர் முள்ளி, Hygrophila spinose, மணி – sapphire, கேழ் – color, அன்ன – like, மா நீர் – dark ocean, சேர்ப்ப – O lord of the shore (அண்மை விளி), இம்மை மாறி – if this life ends, மறுமை ஆயினும் – even if it is the next birth, நீ ஆகியர் என் கணவனை – may you be my husband (கணவனை – ஐ சாரியை), யான் ஆகியர் – may I be the one, நின் நெஞ்சு – your heart, நேர்பவள் – I will be agreeable, ஏ – அசை நிலை, an expletive

6. குறுந்தொகை பாடல் - 44
8. குறுந்தொகை பாடல் - 58