குறுந்தொகை 87, கபிலர்

மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப, யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்,
பசைஇப் பசந்தன்று நுதலே,
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென்தோளே.  5

 

பாடல் பின்னணி:  தலைவன் கடவுள்காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, தலைவனை அக்கடவுள் ஒறுக்குமோ என்று அஞ்சிய தலைவி, கடவுளை வாழ்த்தியது (சூளுற்று – உறுதிமொழி உரைத்து). 

 

பொருளுரை:  ஊரின் பொது இடத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள் கொடியவர்களை வருத்தும் என அறிந்தவர்கள் கூறுவார்கள்.  சிறிதும் அக்கடவுளால் வருத்தம் அடையும் நிலையில் உள்ள கொடியவர் இல்லை, குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய என் தலைவர்.  என் நெற்றி அவரை விரும்பியதால் பசலை அடைந்தது.  என் மனம் அவரை எண்ணி நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள்கள் மெலிந்தன.  என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் பொறுப்பில்லை.

 

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் தலைவியோடு அளவளாவியிருந்த பொழுது கடம்ப மரத்தில் உறையும் கடவுள் மேல் ஆணையிட்டு ‘நின்னைப் பிரியேன்; பிரிவின் ஆற்றேன்” என்று தெளித்தான்.  பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள்.  தன்னுடைய வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒதுக்குமென்று அவன் கவன்றான்.  ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தை பரவினாள்.  மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, பேஎ – இன்னிசை அளபெடை, தெறூஉம் – இன்னிசை அளபெடை, பசைஇ – சொல்லிசை அளபெடை, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி.

 

சொற்பொருள்:  மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள் – பொது இடத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள், கொடியோர்த் தெறூஉம் என்ப – கொடியவர்களை வருந்தச் செய்யும் எனக்கூறுவார்கள், யாவதும் கொடியர் அல்லர் – சிறிதும் அக்கடவுளால் வருத்தம் அடையும் நிலையில் உள்ள கொடியவர் இல்லை, எம் குன்று கெழு நாடர் – குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய என் தலைவர், பசைஇப் பசந்தன்று நுதலே – என் நெற்றி அவரை விரும்பியதால் பசலை அடைந்தது, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே – என் மனம் அவரை எண்ணி நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள்கள் மெலிந்தன

 

Kurunthokai 87, Kapilar, Kurinji Thinai – What the heroine
They say the kadampam tree
in the public grounds has a fierce,
ancient god who punishes those
who are wicked.

My man from the mountains is not
an evil person to be punished by that
god.  My desire for him has made my
forehead turn sallow.  My weakness
for him has made my curved, delicate
arms to grow thin.   He is not the
reason for these changes.

 

Notes:  தலைவன் கடவுள்காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, தலைவனை அக்கடவுள் ஒறுக்குமோ என்று அஞ்சிய தலைவி, கடவுளை வாழ்த்தியது (சூளுற்று – உறுதிமொழி உரைத்து).  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் தலைவியோடு அளவளாவியிருந்த பொழுது கடம்ப மரத்தில் உறையும் கடவுள் மேல் ஆணையிட்டு ‘நின்னைப் பிரியேன்; பிரிவின் ஆற்றேன்” என்று தெளித்தான்.  பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள்.  தன்னுடைய வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒதுக்குமென்று அவன் கவன்றான்.  ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தை பரவினாள்.

 

Meanings:  மன்ற – in the common place, மராஅத்த – in a kadampam tree, கடம்பம், Common cadamba, Neolamarckia cadamba (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), பேஎ முதிர் – fierce and ancient (பேஎ – இன்னிசை அளபெடை), கடவுள் – god, கொடியோர் – those who are evil, தெறூஉம் – will terrorize them (இன்னிசை அளபெடை), என்ப – they say, யாவதும் கொடியர் அல்லர் – he is not harsh at all, எம் குன்று கெழு நாடர் – my man from the mountain country, பசைஇ – desired (சொல்லிசை அளபெடை), பசந்தன்று நுதல் – my forehead has become yellow, my forehead has paled, ஏ – அசை நிலை, an expletive, ஞெகிழ – since my mind weakened for him, since my mind softened for him, ஞெகிழ்ந்தன்று – they became slim (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), தட – curved, wide, மென்தோள் – delicate arms, ஏ – அசை நிலை, an expletive

8. குறுந்தொகை பாடல் - 58
10. குறுந்தொகை பாடல் - 130